Untitled Document
Office Hours:
Monday to Sunday

Call us: 98430 63773


கட்சி தலைமையகம் - சத்யாலயம், No.33, முதல் மாடி, கண்ணதாசன் தெரு, S.S.காலனி, மதுரை - 625010

திமுகவில் என்ன நடக்கிறது...கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில், பழுத்த அனுபவசாலி கருணாநிதியையே பெருமூச்சுவிடவைப்பவர் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா...ஆனால் அதெல்லாம் நேற்றுவரை. அவரால் அடையாளம் காணப்பட்ட ஒரு பெண் எம்.பி, நாடாளுமன்றத்தில் நடுமையத்தில் நின்று அவருக்கு எதிராக கோலை சுழற்றுகிறார். பரபரப்பான இந்த  அரசியல் படத்தின் இடைவேளை விடுவதற்கு முன்பே அடுத்த பரபரப்பு கிளம்பியுள்ளது.

எம்.ஜி.ஆர் அபிமானிகளை ஜெயலலிதா புறக்கணிப்பதாகக் கூறி அதிமுகவுக்கு எதிராக புதிய கட்சி ஒன்றை துவக்கியிருக்கிறார் மதுரையைச் சேர்ந்த அரசியல் புள்ளி ஒருவர். எம்.ஜி.ஆர் போன்ற தோற்றம் கொண்டவரான சக்ரவர்த்தி, எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு நன்கு அறிமுகமானவர். சக்ரவர்த்தி திருமகன் என்ற எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பில், தானே கதாநாயகனாக நடித்து திரைப்படம் வெளியிட்டிருக்கிறார். மற்றுமொரு படத்தின் தயாரிப்பு பணியில் இருக்கிறார். இந்த இடைவேளையில்தான் புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கடந்த 6 ம்தேதி அழைப்பிதழ் போட்டு புதிய கட்சியை மதுரையில் துவக்கியிருக்கிறார்.

போட்டி சட்டமன்றத்தை நடத்தியதற்கே திமுக எம்.எல்.ஏக்கள் படாதபாடு பட்டுவரும் நிலையில் கட்சிக்குள் இருந்தபடியே போட்டி கட்சியை துவக்கியிருக்கும் சக்ரவர்த்தியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். சிரீயஷாகவே பதிலளிக்கிறார் மனிதர்.

கட்சியை துவக்கவேண்டிய நிர்பந்தம் ஏன் உங்களுக்கு...

எம்.ஜி.ஆர் அதிமுகவை துவக்கியபோது பட்ட கஸ்டங்கள், அவமானங்கள், இழந்த உயிர்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. அதிமுக என்ற கட்சியின் அடித்தளமே ரசிகர்கள்தான். அத்தனை கஸ்டங்களுக்கு இடையில் உருவான  கட்சி, இன்று முழுக்க முழுக்க ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டது. ஜெயலலிதாவை தெரிந்திருப்பவர்களைவிட , மன்னார்குடியைச் சேர்ந்த அந்த குடும்பத்து மனிதர்களை தெரிந்திருந்தால் மட்டுமே கட்சியில் மதிப்பும் பொறுப்பும் என்றாகிவிட்டது.

மதுரையில் அந்த கட்சியினர் சாதி அரசியலைதான் நடத்திவருகின்றனர். எம்.ஜி.ஆர் எந்த நோக்கத்திற்காக இந்த கட்சியை உருவாக்கினாரோ அந்த நோக்கம் சிதைக்கப்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆர் அபிமானிகள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். இதுவரை எனக்கு ஒரு வட்டச்செயலாளர் பொறுப்பைக் கூட அதிமுக வழங்கவில்லை. இதுதான் எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கு கட்சியில் உள்ள மரியாதை. அதனால்தான் என்னைப்போன்றவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கட்சியை துவக்கினேன்.

அப்படியானால் கட்சியில் பொறுப்பு வழங்கப்படாத  தனிப்பட்ட காரணத்தினால்தான் கட்சி துவக்கியிருக்கிறீர்களா...

தவறு... என்னை ஒரு உதாரணத்திற்காக சொன்னேன். என்னைப்போல் லட்சக்கணக்கான பேர் புறக்கணிக்கப்பட்டு, பெயருக்கு அந்த கட்சியில் அவமானங்களை சந்தித்துக்கொண்டு தொடர்கிறார்கள். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தேர்தலுக்காக கருவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டு பின்னர் துாக்கியெறியப்படுகிறார்கள். இதுதொடர்ந்ததே கட்சி துவக்க காரணம்.

இத்தனை வருடம் கட்சியில் இருந்தும் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பது நம்புகிற மாதிரி இல்லையே, என்ன காரணம்...

நான் எம்.ஜி.ஆர் உருவத்தில் இருப்பதுதான். பலர் செயற்கையாக எம்.ஜி.ஆர் போல் வேடமிட்டு தோற்றம் அளிப்பார்கள். எனக்கு இயல்பாகவே அந்த தோற்றம் உண்டு. இதனால் பொது இடங்களிலும் கட்சிப் பொதுக் கூட்டங்களிலும் எம்.ஜி.ஆர் அபிமானிகள் என்னை சூழந்துகொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வர். இது உள்ளுர் தலைவர்களுக்கு ஒருவித எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்திவிட்டது. இந்த 30 வருடங்களில் மதுரையில் பல பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். எந்த எதிர்பார்ப்புகளுமின்றி கட்சிக்காக உழைத்திருக்கிறேன். ஆனால் எம்.ஜி.ஆர் போல் தோற்றமளிப்பதால் பொறுப்புகளை வழங்கினால் எங்கே இவன் வளர்ந்துவிடுவானோ என திட்டமிட்டு என்னை புறக்கணிக்கின்றனர்.

சக்ரவர்த்தி திருமகன் என்ற பெயரில் நான் எடுத்தை படத்தை ட்ரெய்லருக்காக கட்சியின் தொலைக்காட்சிக்கு கொடுத்தேன். இன்று வரை அது ஒளிபரப்பாகவில்லை. வேறு ஒருவர் மூலம் காரணம் கேட்டபோது அவர் முகம் எம்.ஜி.ஆர் போல இருப்பதால் நிறுத்திவைக்கச் சொல்லியிருப்பதாக சொல்லியிருக்கின்றனர். இதுதான் எம்.ஜி.ஆரை பின்பற்றிவந்த எங்களைப்போன்றவர்களின் நிலை. எம்.ஜி.ஆர் புகழை குறைப்பதுதான் அதிமுக மற்றும் அதன் பொதுச்செயலாளரின் நோக்கம்.
எம்.ஜி.ஆர் அபிமானிகள் புறக்கணிக்கப்படுவதைவிட எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி அவரது புகழை மறைப்பதுதான் எங்களை பெரும் வேதனைக்குள்ளாக்குகிறது.

எந்த திட்டத்தை துவக்கினாலும் அதற்கு அம்மா பெயர்தான். உப்பாக இருந்தாலும் தண்ணீர் பாட்டிலானாலும் தன்னுடைய பெயரையே சூட்டிக்கொள்கிறார். எம்.ஜி.ஆர் தன்னை வளர்த்த அண்ணாவுக்கே பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுத்தார். ஜெயலலிதா அப்படி செய்யவில்லை. எம்.ஜி.ஆர் பெயரை இருட்டடிப்பு செய்கிறார்.

எம்.ஜி.ஆருக்கு நிரந்தரமான புகழை தந்திருப்பது சத்துணவுத் திட்டம். அந்த திட்டத்தினால் எம்.ஜி.ஆருக்கு கிடைக்கும் புகழை இருட்டடிப்பு செய்வதற்காக இன்றைய அரசு சத்தமில்லாமல் ஒருவேலையை செய்துவருகிறது. அந்த துறையில் பல திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை. அல்லது ஒதுக்கப்பட்ட நிதியை இதுவரை தராமல் இழுத்தடிப்பு செய்துவருகிறார்கள். இதனால் திட்டம் பாழாகி, அதை தமது பெயரில் வேறு ஒரு திட்டமாக மாற்றுவதே ஜெயலலிதாவின் நோக்கம். இப்படி எதிர்காலத்தில் எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரை மக்கள் மறந்துவிடவேண்டும் என நினைக்கிறார் அவர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் அபிமானிகள் எப்படி இந்த கட்சியில் தொடர முடியும். எம்.ஜி.ஆர் வளர்த்தெடுத்த கட்சி எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கானதாகவேண்டும். கட்சி துவங்க காரணம் இதுதான்.

அதிமுகவுக்கு அடித்தளம் எம்.ஜி.ஆர் ரசிகர்களாக இருக்கலாம்...அதற்காக அவர்களுக்கே முக்கியத்துவம் தந்துகொண்டிருக்கமுடியுமா...

எங்கள் கோரிக்கை, எம்.ஜி.ஆரை புறக்கணிக்காதீர் என்பதுதான். கட்சிக்காக கஷ்டப்பட்ட தலைவர் பெயரில் எந்த திட்டங்களும் இல்லை. கூட்டங்களில் எம்.ஜி.ஆர் பற்றி பேசப்படுவதில்லை. பேனர்களில் எம்.ஜி.ஆர் படம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் பெயர் சொன்னாலே ஏதோ மாற்றுக்கட்சிக்காரனை பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். வெளிப்படையாக சொல்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அதிமுக சாதிக்கட்சியாக முழுமையாக மாறிவிடும். ஜெயலலிதாவிற்குப்பின் எம்.ஜி.ஆர் வளர்த்தெடுத்த கட்சியை அனுபவிக்கப்போகிறவர்கள் யார்...இதற்காகத்தான் இத்தனை கஸ்டங்களை அனுபவித்தாரா எம்.ஜி.ஆர்...

புதிய கட்சிக்கு வரவேற்பு எப்படி.. 

நல்ல வரவேற்பு. மதுரையில் நடந்த கட்சித் துவக்கிவிழாவுக்கு தமிழகம் முழுவதிலிருந்தும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் திரண்டுவந்தனர். அதுவே கட்சியின் முதல் வெற்றி. அவர்களிடம் பேசியதில் அவர்களும் அதே மனக்குறையை பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக சில தினங்களுக்கு முன் முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்தும் அழைப்பு வந்தது. ஆச்சர்யமடைந்தேன். என் தைரியத்தை பாராட்டிய அவர், “எங்களால் இனி பல விஷயங்களை செயல்படுத்தமுடியாது. வெளிப்படையாக எதிர்க்கிற தைரியமும் இல்லை. ஆனால் என் ஆதரவு உண்டு” என வாழ்த்து தெரிவித்தார். கட்சியில் அவருக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதால் அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை.

கருணாநிதிக்கு எதிராக நெடுஞ்செழியனும், எம்.ஜி.ஆருக்கு எதிராக எஸ்.டி சோமசுந்தரமும் கட்சி துவங்கி காணாமல் போன கடந்த கால வரலாறுகள் உண்டே...மக்கள் பலம் கொண்ட ஒரு தலைவரை எதிர்த்து கட்சி நடத்தி அவரது செல்வாக்கை குறைக்க முடியுமா...

உண்மைதான்...நீங்கள் சொன்னவர்களில் எஸ்.டி.எஸ், எம்.ஜி.ஆரின் புகழை குறைக்க கட்சித்துவங்கியவர். அதனால் காணாமல்போனார். ஆனால் நாங்கள் இன்று கட்சி துவங்கியிருப்பதே அந்த எம்.ஜி.ஆரின் புகழை காக்கவேண்டும் என்றுதானே! எம்.ஜி.ஆரைவிட மக்கள்சக்தி கொண்டவர் வேறு யாரேனும உண்டா?...இந்த நுட்பமான விஷயத்தை புரிந்துகொள்ளுங்கள்.

புரட்சித்தலைவரின் தொண்டர்கள் என்னுடன் தொடர்ந்துபேசிவருகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் செய்து புறக்கணிக்கப்பட்ட தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறேன். புரட்சித்தலைவரின் சிந்தனைகளை எங்கள் கட்சி செயல்படுத்தும். எம்.ஜி.ஆர் அபிமானிகளுக்கான கட்சியாக இது இருக்கும்.

புதிய கட்சிக்கு எதிர்ப்புகள் ஏதேனும் வந்ததா...

வராமலிருக்குமா...மதுரையின் முக்கிய புள்ளி ஒருவர் மூலம் நைச்சியமான மிரட்டல் வந்தது. 'கட்சிப் பேரை கெடுக்கப்பார்க்கறீயா' என கொந்தளித்தவர், 'எதையாவது பண்ணிக்க, ஆனா, எம்.ஜி.ஆர் படத்தை பயன்படுத்தாதே' என எகிறினார். பதிலுக்கு நானும், “எம்.ஜி.ஆர் 1972 ல் கட்சி அதிமுகவை துவக்கியபோது கொடியிலும் கட்சியின் பெயரிலும்  அண்ணாவின் படத்தை இடம்பெறச் செய்தார். அதற்கு கருணாநிதியே ஒன்றும் செய்யமுடியவில்லை. எம்.ஜி.ஆர் எங்கள் சொத்து. அவர் படத்தை பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர் படத்தை நீங்க முறையாக பயன்படுத்தியிருந்தீங்கன்னா நாங்க ஏன் தனியா கட்சி துவக்கிறோம்'னு பதில் சொன்னேன். 'பிரச்னை வராம பார்த்துக்கங்க...'என்றார். எம்.ஜி.ஆருக்காக உயிரையே கொடுக்க அவரது ரசிகர்கள் தயாரா இருக்கோம். அதைவிட இழப்பு ஒன்று வருமா என்றேன். போனை வெச்சிட்டார்.

இன்றைய அரசியல் எப்படி உள்ளது...

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே அநாகரிக அரசியலை செய்கின்றன. இலவசங்களை கொடுத்து மக்களை சோம்பேறிகளாக்கிவிட்டனர். இன்று விவசாயத்திற்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை. காரணம் 100 நாள் வேலைதிட்டம். வேலை செய்யாமல் காசு வரும்போது வேலைக்கு ஏன் போக வேண்டும் என்ற மனநிலை வந்துவிட்டது பலருக்கு. சட்டசபை ஆடல் பாடல் என அரசவை போல் ஆகிவிட்டது. போட்டி சட்டமன்றம் நடத்தி ஜனநாயகத்தை கேலிக்குரியதாக்குகிறது திமுக. 'திமுக, அதிமுக இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று காமராஜர் அன்று சொன்னது இன்று நிஜமாகி வருகிறது.

நேற்றுவரை 'அம்மா' புகழ்பாடிவிட்டு இன்று அதிமுகவுக்கு எதிராக கட்சி பொங்குகிறீர்கள்...திடீரென ஜெயலலிதா உங்களை அழைத்து சமாதானப்படுத்தினால் என்ன நிலை எடுப்பீர்கள்

அத்தனை சுலபமல்ல அது. சொன்னால் நம்பமாட்டீர்கள்...கட்சியில் இந்த 30 ஆண்டுகளில் ஜெயலலிதாவை இதுவரை ஒருமுறை கூட சந்தித்ததில்லை. சந்திக்கவிட்டதில்லை. தோட்டத்திலும் அலுவலகத்திலும் உள்ள சில ஆட்கள் இதை சாமர்த்தியமாக செய்கிறார்கள். அவரை பார்ப்பதற்காக கொட நாட்டிலும், சென்னை வீட்டிலும் என பல நாட்கள் காத்திருந்திருக்கிறேன். அவரை சந்திப்பதற்காகவே தேர்தல் சமயங்களில் விண்ணப்பிப்பேன். ஒரு பலனுமில்லை. போயஸ் கார்டனில் தீக்குளிக்க முயன்றால்தான் அவரை சந்திக்க முடியும் என்பதுதான் நிலை. அப்படிப்பட்டவர் இனி அழைப்பார் என்பதில் நம்பிக்கையில்லை.